செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில் உலக சாதனை பாரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை ருத்ரா நாட்டிய கலைக்கூடம் சார்பில் 3 முதல் 15 வயது வரையுள்ள 250 மாணவிகள், கோயில் வளாகத்தில் தாம்பாளத் தட்டில் நின்றபடி பரத நாட்டியம் ஆடினர். மொத்தம் 15 வகையான நாட்டியங்களை பாவனைகளுடன் தாம்பாளத் தட்டில் நின்றாபடியே ஆடி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர்.
இடைவிடாது 2 மணி நேரம் நடனமாடிய மாணவிகளின் ஆட்டத்தை நோபல் உலக சாதனை புத்தகம் அங்கிகரித்து, உலக சாதனையாக அறிவித்துள்ளது. இதையடுத்து அதற்கான சான்றையும் வழங்கியுள்ளது. மேலும் நாட்டிய மாணவிகள் அனைவருக்கும் நாட்டிய மணிகள் என்ற சான்றும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.