செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செந்தாரப்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அனுமதிக்காத நிலையில், காளைகள் அவிழ்த்து விடப்பட்டது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் எருதாட்ட நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்து காளைகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த தேமுதிக முன்னாள் கவுன்சிலர் மணிவேல் (43), அழைத்துவந்த காளை மாடு மிரண்டு ஓடியுள்ளது. அதை தடுத்து நிறுத்த முயன்ற அவரின் கழுத்தில் காளை குத்தியது. இதில், நிகழ்விடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய தம்மம்பட்டி போலீசார், உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், செந்தாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த, பூபதி (22), கொண்டையம்பள்ளி மணிகண்டன் (20), உலிபுரம் வரதன் (50), ஆகிய மூவரும் காளை முட்டியதில் படுகாயமடைந்தனர்.