சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் பெற்ற எழுத்தாளர்களுக்கும் கனவு இல்லம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சாகித்ய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற தமிழ்நாடு எழுத்தாளர் குழுவின் தமிழ்நாடு பிரிவின் அளித்துள்ள விண்ணப்பத்தின் விவரம் பின்வருமாறு,,
அந்த விண்ணப்பத்தில்,
”பெருமதிப்புக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..
தாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் திராவிட மாடல் நல்லாட்சியில் முன்மாதிரித் திட்டமாக அறிமுகப்படுத்திய, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம்" என்னும் மகத்தான திட்டத்தால் தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் பலரும், தங்கள் விருப்பம்போல வசிப்பதற்கான வாழ்விடத்தைப் பெற்றுப் பயனடைந்து வருவது நாடறிந்தது.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் என அறிவிக்கப்பட்டதோடு, தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது, கலைஞர் பொற்கிழி விருது, தமிழ்ப்பேராய விருது போன்ற அங்கீகாரங்கள் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் சான்றோர்களும் பயனாளிகளாக இணைக்கப்பட்டு, அவர்களுக்கு கனவு இல்லம் திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே பெருமைக்குரிய முன்மாதிரி என தயங்காமல் கூற முடியும்.
தங்களது தந்தையும் தி.மு.க முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் தமது 17 வயது தொடங்கி 92-ஆம் அகவை வரை படைப்பாளியாகவும் பத்திரிகையாளராகவும் ஓய்வின்றி தமிழ் நிலத்திற்கு உழைத்த பன்முகத் திறமையாளர். தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத்தந்தவர், குமரிமுனையில் வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்தவர், சென்னையில் வள்ளுவருக்குக் கோட்டமும் பூம்புகாரில் சிலப்பதிகாரக் கலைக்கூடமும் நிறுவியவர், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை அமைத்தவர், எழுத்தாளர்களை தம் தோழமையாகக் கருதியவர். அவரது கொள்கை வழிகாட்டுதலோடு நடக்கும் தங்கள் ஆட்சியில் எழுத்தாளர்கள் வளமடைய தாங்கள் செயல்படுத்தும் மேற்கண்ட திட்டங்கள் எழுத்தாளர்களுக்கு நிறைவளிப்பதாக உள்ளன.
சாகித்திய அகாதெமி அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் செயல்படும் திறன்மிகு படைப்பாளிகளுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்குவது போலவே சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருதும், முப்பத்து ஐந்து வயது(35) வரையிலான படைப்பாளிகளுக்கும் சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருதும், சிறார் இலக்கிய படைப்பாளிகளுக்கு சாகித்திய அகாதெமி பாலபுரஸ்கார் விருதும் வழங்கிக் கௌரவிக்கிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 14 பேருக்கு (ஒருவர் மரணமடைந்துவிட்டார்) சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் கனவு இல்லம் திட்டத்தில் சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர்களான எங்களையும் பயனாளிகளாகச் சேர்த்து, கனவு இல்லத்தை எங்களுக்கும் வழங்க பரிசீலித்து, ஆவணம்செய்ய வேண்டுகிறோம். சாகித்திய அகாதெமி விருது பெற்ற படைப்பாளிகளைப் போன்றே நாங்களும் தமிழ் இலக்கியத்துக்காகவும் பண்பாட்டுக்காகவும் மொழிக்காகவும் கடமைகொண்டு உழைத்தும் பங்களித்தும் வருகிறோம். அதேநேரம், எங்களில் பெரும்பாலானோர் வாழ்வதற்குச் சொந்தமாக இல்லமோ போதுமான வசதிகளோ இல்லாமல் நெருக்கடியான சூழலில் இருந்து வருகிறோம்.
கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கும் எங்களுக்குச் சம்பளத்தில் கணிசமான பங்கு வாடகை செலுத்துவதில் போய்விடுவதால் அடிக்கடி வீட்டை மாற்றும் நெருக்கடிக்கும் அலைச்சலுக்கும் உள்ளாகிறோம். சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருதுபெற்ற இளம் எழுத்தாளர்களான எங்களுக்கு அடுத்த முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணிகளும் சமூகத்துக்குப் பங்களிப்பதற்கான கடமைகளும் காத்துக்கிடக்கின்றன.
எழுத்து முதிர்ந்து வளம்பெறும் பருவத்தில் உலகியல் கவலைகள் படைப்பாளிகளைச் சுழற்றி அடிப்பது எல்லாக் காலகட்டங்களிலும் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் முக்கியமான சிக்கல். எங்களுக்குக் கனவு இல்லத் திட்டத்தின்படி, வீடு அளிக்கப்படும்போது எங்களால் தமிழ் மண்ணில் அடுத்த முப்பதாண்டுகள் காலூன்றி அயராது பணியாற்ற இயலும். ஆகையால், சாகித்திய அகாதெமி விருது, கலைஞர் விருது, தகைசால் தமிழர் விருது. தமிழ்ப்பேராய விருது பெற்ற சான்றோர்களுக்கு கனவு இல்லம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அண்மையில் சாகித்திய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது பெற்றவர்களுக்கு கனவு இல்லம் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளதைக் கவனத்தில்கொண்டு (தமிழ் வளர்ச்சித் துறை அரசாணை எண் -89, தேதி-11.6.2024) சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார்' விருது பெற்ற எழுத்தாளர்களுக்கும் "கனவு இல்லம்" திட்டத்தை விரிவாக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
கலைஞரின் செயலாண்மை நீட்சியாக ஆட்சி புரிந்துவரும் தாங்கள், தமிழின் பண்பாட்டுக் காவலர்களான படைப்பாளிகள் எங்களது நிலையை உணர்ந்து கனவு இல்லம் என்னும் காப்பு அளித்து உதவ வேண்டும் எனவும் இது எங்கள் வளர்ச்சிக்கும் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாக இருக்கும் என்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தியுள்ளனர்.