தமிழ்நாடு

ஹெச்.ராஜா வேண்டுகோள்: முடிவுக்கு வந்தது ஜீயர் உண்ணாவிரதம்

rajakannan

ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் வேண்டுகோளை அடுத்து காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டத்தை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வாபஸ் பெற்றார்.

தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு தமிழகம் முழுக்க இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த விவகாரத்தில் வைரமுத்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, சடகோப ராமானுஜ ஜீயர் ஆண்டாள் கோயிலில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொண்டார். ஆனால் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.

இதனிடையே, வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் தமிழக நிர்வாகிகள் ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்தினர். உடல் நிலையை கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஜீயர் தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மக்கள், இந்து அமைப்புகள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றதாக கூறிய ஜீயர், வைரமுத்து மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.

ஜீயரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “ஆண்டாள் மட்டுமின்றி திருவள்ளுவர், உவேசா, வள்ளலார் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளை தனது கட்டுரைகள் மூலமாக கொச்சைப்படுத்தியவர் வைரமுத்து” என்று விமர்சித்தார்.