தமிழ்நாடு

”7 பேர் விடுதலையை கொண்டாடுவது மனவருத்தமளிக்கிறது” -புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

webteam

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை மறுசீராய்வு செய்ய மனு தாக்கல் செய்ய புதுச்சேரியில் உள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் முடிவெடுக்கும் எனவும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கும் அவர், ராஜிவ் காந்தி கொலை வழக்கின் 7 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை மத்திய அரசு மீண்டும் மறு சீராய்வு செய்ய மனுதாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். அதை ஏற்று தற்போது மத்திய அரசு மறு சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளதற்கு, எனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை நடைமுறை படுத்தவில்லை. அதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் இதை முதலமைச்சர் ரங்கசாமி நடைமுறைப்படுத்த கூடாது என வலியுறுத்திய நாராயணசாமி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவின் மீது, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய புதுச்சேரியில் உள்ள மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் முடிவெடுப்போம் என்றார்.

மேலும் புதுச்சேரியில் அரசால் உயர்த்தப்பட்ட வரி மற்றும் விலைவாசி உயர்வால் வியாபாரிகள் மற்றும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஷ ஊசியை வலி இல்லாமல் செலுத்துகின்றார் என்று கூறிய அவர், அத்தியாவசிய பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட வரியை புதுச்சேரி மாநில அரசு முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேர் விடுதலை குறித்து திமுகவின் நிலைபாடு பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, திமுக கூட்டணி கட்சி என்றாலும் கூட கொலை செய்யப்பட்டது எங்கள் தலைவர், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது, திமுக அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக 7 பேர் விடுதலைக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என தெரிவித்த அவர், 7 பேர் விடுதலையை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கொண்டாடி வருவது மனவருத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.