விஜய் - எஸ்.ஏ.சந்திரசேகர் web
தமிழ்நாடு

”எம்ஜிஆர் போல் மக்களின் தொண்டனாக உருவெடுக்க விஜய் விரும்புகிறார்..” - தந்தை எஸ்.ஏ.சி பேச்சு

மக்களின் தொண்டனாக உருவெடுக்க நினைக்கும் தமிழகத்தின் தலைமகன் விஜய் என்று அவருடைய தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

Rishan Vengai

மக்களின் தொண்டனாக உருவெடுக்க நினைக்கும் தமிழகத்தின் தலைமகன் விஜய் என்று அவருடைய தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமாக வலம்வரும் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக நுழைந்த விஜய் விழுப்புரத்தில் நடந்த முதல் மாநாட்டில் ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று அரசியல் களத்தில் தீயை பற்றவைத்தார். பின்னர் மதுரையில் நடந்த இரண்டாவது மாநாட்டில் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற முழக்கத்தை விடுத்து ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார். அதனைத்தொடர்ந்து பூத் கமிட்டி கூட்டம், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நிர்வாகிகள் அறிவிப்பு அடுத்தடுத்த நகர்வை சரியாக செய்த தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரை செய்ய மக்களை நேரில் சந்திக்க களத்திற்கு செல்ல திட்டமிட்டார்.

தவெக தலைவர் விஜய் பரப்புரை

அதன்படி 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை கடந்த 13ஆம் தேதி திருச்சி, அரியலூரில் தொடங்கிய விஜய், இரண்டாம் கட்டமாக நாகை, திருவாரூரில் கடந்த 20ஆம் தேதி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அதனைத்தொடர்ந்து 3ஆவது கட்டமாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் இன்று பரப்புரையில் ஈடுபட்டபோது, கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள் உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தவிவகாரத்தில் விஜயின் அரசியல் வருகைக்கு பெரிய கலங்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

எம்ஜிஆர் வழியில் தமிழகத்தின் தலைமகன் ஆவார் விஜய்..

தவெக தலைவர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், எம்ஜிஆர் வழியில் மக்கள் தொண்டனாக உருவெடுக்க விஜய் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விகடன் டெலிவிசன் விருதுவழங்கும் விழாவில் பேசியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், “எம்.ஜி.ஆர் தனக்காக வாழவில்லை, அவரின் ஏழு படங்களில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அவர் அரசியலுக்கு வந்தபிறகு தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. அதன்பிறகு அப்படிப்பட்ட அரசியல் தலைவர்களை நான் பார்க்கவில்லை. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை.

மறைந்தும் வாழ்கின்ற மனிதர்கள் அரிது. இன்று ஒருவர், அந்த ஒரு இடத்ஹ்டை மனதில் வைத்துக்கொண்டு, வாழ்கிற நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, தானும் தமிழ்நாட்டு சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவர் என்னுடைய மகன் என்று நினைக்கும்போது ஒரு தகப்பனாக எனக்கு பெருமையாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர் போல மக்கள் மனசுல நிற்கும் தலைவனாக, மக்கள் தொண்டனாக உருவெடுக்க நினைக்கும் தமிழகத்தின் தலைமகன், என் மகன் விஜய்” என்று பேசியுள்ளார்.