தமிழ்நாடு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு - 10 பெண்கள் தடுத்து நிறுத்தம்

rajakannan

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசிக்க ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்துவந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கினை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றி, 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நவம்பர் 14 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதன்மூலம் பழைய தீர்ப்பு அப்படியே தொடரும் நிலை இருக்கின்றது. 

ஆனால், உச்சநீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவில் சில தெளிவின்மைகள் உள்ளதாகவும் இதற்கான விளக்கங்கள் கிடைக்கப்பெற்ற பின்னர் சபரிமலையில் இந்த சீசனில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தாங்கள் அளித்த தீர்ப்பை இந்தாண்டும் தொடரலாம் என்பதுபோல உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு இருப்பதாகவும் எனினும் இதை தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை தாங்கள் செயல்படுத்துவது உறுதி என்றும் கேரள முதல்வர் தெரிவித்தார்.

இதனிடையே, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு சென்றால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். நீதிமன்றம் அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், சபரிமலை கோயில் புரட்சி செய்யும் இடமில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்களில் 50 வயதுக்கும் கீழ் இருந்த 10 பெண்களை கேரள போலீசார் திருப்பி  அனுப்பினர். இதனிடையே, மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. நடைதிறப்பையொட்டி சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகின்றன.