தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை - சாட்சியமளித்தவரின் வாக்குமூலத்தில் திருப்புமுனை

jagadeesh

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ள ஓட்டுநர் ஜெயசேகர், காவல் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது ஜெயராஜ் - பென்னிக்சின் உடைகளில் ரத்தம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஆம் ஆண்டு காவல் துறையினர் தாக்கியதில் உயிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. வழக்கின் விசாரணை நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலைமைக்காவலர் ஜெயசேகர் நேரில் சாட்சி கூறினார். காவல்துறை வாகனத்தின் அருகே தாம் இருந்தபோது, காவல் நிலையத்தின் உள்ளே இருந்து கதறல் சத்தம் கேட்டதாகவும், மறுநாள் காலை ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலிலும் ஆடையிலும் ரத்தம் இருந்தததாகவும் ஜெயசேகர் சாட்சியளித்துள்ளார். இதையடுத்து அடுத்தகட்ட விசாரணையை 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதனிடையே, பிணை கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.