தமிழ்நாடு

மீண்டும் ஒரு ஒகி புயலா? நம்ப வேண்டாம்

Rasus

கன்னியாகுமரி மாவட்டத்தை ஒகி புயல் போன்று மீண்டும் ஒரு புயல் தாக்க உள்ளதாக செய்தி பரவும் நிலையில் அது வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்து.

கடந்த டிசம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக தமிழக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதங்களை சந்தித்தது. கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் மாயமாகினர். இதனிடையே ஒகி புயல் போன்று மீண்டும் ஒரு புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்க உள்ளதாக செய்தி பரவியது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அனலாக பறந்த இந்த செய்தியால் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிறிது கலக்கம் அடைந்தனர். இந்நிலையில் இது வெறும் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ இது மிகவும் வலுகுறைந்த ஒன்று. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வேண்டுமானால் மாறலாம். ஒகி புயல் போன்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே மீண்டும் ஒரு ஒகி புயல் போன்ற செய்தி தவறானது” என தெரிவித்துள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பிலோ, கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி லட்சத்தீவு நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒகி புயல் போன்று பாதிப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.