தமிழ்நாடு

சலூன் கடை செல்பவர்களுக்கு ஆதார் எண் அவசியம்..!

webteam

சலூன் கடைகளுக்கு செல்பவர்கள், தங்களின் ஆதார் எண்களை சொல்ல வேண்டியது அவசியமாகியுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக சலூன், அழகு நிலையங்களுக்கு சில அறிவுரைகளை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “அழகு நிலையம் மற்றும் ஸ்பா, சலூன்களின் நுழைவு வாயிலில் சோப்பு கொண்டு கைகழுவ வசதிகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, ஆதார் எண் கைப்பேசி எண் ஆகியவற்றை குறித்து வைக்க வேண்டும்.

பணியாளர்கள் தங்கள் கைகளை துடைக்க பேப்பர் நாப்கின் வைப்பதோடு அதை பயன்படுத்தியபின் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். கடைகளின் உரிமையாளரும் பணியாளரும் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும்.

பணியாளர்களுக்கு இருமல், சளி, தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை அணுகி அவர்கள் கூறும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். அவர்கள் எக்காரணத்தை கொண்டும் பணியில் ஈடுபடக்கூடாது. குளிர்சாதன பெட்டி இருந்தாலும் உபயோகிக்க கூடாது. அழகூட்டும் பணி முடிவடைந்ததும் அனைத்து பொருட்களையும் சானிடைசர் போட்டு துடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.