சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பூந்தமல்லி, திருவேற்காடு மற்றும் மாங்காடு நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 990 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள இந்த 3 நகராட்சிகளிலும் தலா 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகராட்சிகளில் பாதாள சாக்கடை அமைக்க 15 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தாததால் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் வாயிலாக இந்த 3 நகராட்சிகளிலும் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 990 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் இந்த பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது