வெள்ளம், மு.க.ஸ்டாலின்
வெள்ளம், மு.க.ஸ்டாலின் ட்விட்டர்
தமிழ்நாடு

”மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம்”.. தமிழக அரசு அறிவிப்பு - முழுவிபரம்

Prakash J

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில், மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

சென்னை மழை

இதை தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியாயவிலை கடைகள் மூலம் இத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரமும், 33%க்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரமும், எருது, பசு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.37,500ம், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்புக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரமும், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.