மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதலில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின்போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை விமலா என்பவர் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘ கடந்த 2017-ம் ஆண்டு ஜன.17 முதல் ஜன.23 வரை இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 2017 ஜன.23 அன்று பிற்பகல் 3 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
நாங்கள் குடியிருந்த பகுதியிலும் போலீஸார் இளைஞர்களை துரத்திக்கொண்டு வந்தனர். வன்முறை அதிகரித்ததால் எனது மகனும் நான் வீட்டை பூட்டினோம். அப்போது தெருவினுள் நுழைந்த காவல்துறையினர் திடீரென வீட்டினுள் புகுந்து எங்களை வெளியே இழுத்து சரமாரியாக தாக்கினர்.
எனது மகன் கார்த்தியை (24) லத்தியால் தாக்கியதில் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸாரின் கொடூர தாக்குதலால் அவனது இடது கண் பார்வை பறிபோய் விட்டது. எனவே, எனது மகனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.” , எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மயிலாப்பூர் துணை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், “போராட்டக்காரர்கள் கல் வீசியதால் தான் மனுதாரரின் மகனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸாரின் தாக்குதலால் பார்வை இழப்பு ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி, ‘இடது கண்ணில் பார்வையிழந்த மனுதாரரின் மகனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.