தமிழ்நாடு

மதுரை கட்டடம் இடிந்து விபத்து: உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி

Sinekadhara

மதுரையில் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை மாநகர் விளக்கத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். நள்ளிரவு 12.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பாக இருசக்கர வாகனத்தின் நடமாடும் தேநீர் கடையின் மூலமாக தேநீர் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. அதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர்கள் அதே பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.