தமிழ்நாடு

ரூ.20,000 கோடி வறட்சி நிவாரணம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ரூ.20,000 கோடி வறட்சி நிவாரணம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

webteam

வறட்சி நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள 20 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணத்தொகை குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த பாலகணேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு இழப்பீடாக 30 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து, வறட்சி இழப்பீட்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மாநில அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். தமிழகத்தில் இதுவரை வறட்சியால் பாதிக்கப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வறட்சியால் உயிரிழக்கும் விவசாயிகள் குறித்து நாள்தோறும் செய்தி தொலைக்காட்சி, நாளிதழ்களில் பார்க்க முடிகிறது. அவ்வாறிருக்கையில் 17 பேர் என்பது குறைவான எண்ணிக்கையாக உள்ளதே என கேள்வி எழுப்பினர்.

வறட்சி நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசிடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கோரியுள்ளதாக மாநில அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து வறட்சி நிவாரணத்தொகை கோரப்பட்டுள்ளது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.