தமிழ்நாடு

அமலுக்கு வந்த வாகன திருத்த சட்டம்... ஒரேநாள்ல இத்தனை லட்சம் அபராதம் வசூல் ஆகியிருக்காம்!

webteam

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி, சென்னையில் நேற்று ஒரே நாளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15.5 லட்சம் ரூபாய் அபராதம் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, இது தொடர்பாக தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று சென்னை உட்பட பல மாவட்டங்களில் புதிய அபராத தொகை விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் படி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் 1000 ரூபாயும், செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 1000 ரூபாயும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் 10ஆயிரம் ரூபாயும், பைக் ரேஸில் ஈடுபடுவோருக்கு 5ஆயிரம் ரூபாயும் போக்குவரத்து காவல்துறையினர் வசூல் செய்து வருகின்றனர்.

அதன்படி நேற்று அமல்படுத்தப்பட்டுள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி சென்னையில் ஒரே நாளில் 2500 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து 15.5லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றும், இன்றும் புதிய போக்குவரத்து அபராதம் குறித்து வாகன ஓட்டிகளிடம் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒரு சிலருக்கு மட்டுமே அபராதம் விதித்து வருவதாகவும், நாளை முதல் தீவிரமாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் பெற இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அபராதம் விதிக்க பயன்படுத்தப்படும் இசெலான் இயந்திரங்களில், இதுவரை 200 இயந்திரங்களில் மட்டுமே புதிய அபராத தொகை அப்டேட் செய்யப்பட்டு இருப்பதாகவும், நாளைக்குள் முழுமையாக அப்டேட் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.