தமிழ்நாடு

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் : அரசு

webteam

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்திலும், அதன் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் செங்கல்பட்டு மாவட்டத்திலும், அதன் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவராணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மேற்குறிப்பிடப்பட்ட  பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.