தமிழ்நாடு

ஜூன் 22 முதல் ரூ.1000 நிவாரணம் வீடுகளுக்கே வரும்..! : முதலமைச்சர் அறிவிப்பு

webteam

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஜூன் 22ஆம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாக பரவும் கொரோனா வைரஸை தடுக்க வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கத்தை நேற்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த பொதுமுடக்கம் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பல்வேறு நகராட்சி, ஊராட்சிப் பகுதிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேசமயம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஏழைய, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 22ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று ரூ.1000 ரொக்கம் வழங்க சம்மந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.