தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த தந்தை - மகன் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்ற வணிகர்களும், தந்தையும், மகனுமான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியினர் போராட்டம் நடத்தியதுடன், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கவுள்ள உத்தரவின்படியும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.