தேனியில் வங்கி ஒன்றில் கவரிங் நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்த நகை மதிப்பீட்டாளரையும், அவரது உதவியாளரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனியில் உள்ள கனரா வங்கிக் கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்தவர் செந்தில், இவருக்கு உதவியாளராக வினோத் என்பவரும் பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் கவரிங் நகைகளை வைத்து வங்கியில் பணம் பெற்று வருவதாகவும், போலியான பெயர்களில் நகைகளை அடகு வைத்து மோசடி செய்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து வங்கி நிர்வாகம் நகைகளை சோதனையிட்ட போது, அதில் பல கவரிங் நகைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு வைக்கப்பட்ட நகைகள் இல்லாததும் கண்டு பிடிக்கப் பட்டது.
இந்நிலையில் வங்கியின் முதன்மை மேலாளர் சுப்பையா, தேனி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்து தலைமறைவாகியுள்ள செந்தில், வினோத் ஆகிய இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து பொதுமக்கள் வங்கியில் குவியத் தொடங்கினர். முறையாக பதில் அளிக்காமல் வங்கியாளர்கள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், வங்கியில் முதன்மை மேலாளர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நகைகள் வழங்கப்படும் என்றும், யாரும் பயப்பட தேவையில்லை எனக் கூறினார்.