திருவாரூர் மாவட்டம் திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றே கால் கோடி ரூபாய் அளவுக்கு கையாடல் நடந்திருப்பதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை குழும இயக்குனர் அலுவலக தணிக்கை குழுவினர் வங்கி வரவு செலவுகளை தணிக்கை செய்த போது ஒரு கோடியே 24 லட்சத்து 77 ஆயிரத்து 241 ரூபாய் முறைகேடு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் எம்.செந்தில்குமார், காவல்துறையில் புகார் அளித்தார். அதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வி.செந்தில்குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆர். செந்தில்குமார் ஆகியோர் சேர்ந்து கையாடல் செய்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. புகாரையடுத்து காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், இந்த முறைகேடு புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் புதிய தலைமுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.