தமிழ்நாடு

சென்னையில் போலீஸை வெட்டிய ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

webteam

ராயப்பேட்டையில் முதல்நிலை காவலரை வெட்டிய ரவுடி, காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சென்னையில் ராயப்பேட்டை தர்கா குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே நேற்றிரவு சிலர் குடித்துவிட்டு தகராறு செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இ2 ராயப்பேட்டை காவல்நிலைய முதல்நிலை காவலர் ராஜவேலு அங்கு ரோந்து சென்றார். அப்போது 5-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு ராஜவேலு கூறியபோது, அங்கிருந்த சுமார் 10 பேரும் காவலரை கத்தியால் சரமாரியாக தாக்கினர். 

இதில் தலையில் வெட்டுப்பட்ட ராஜவேலு, ரத்தம் வடிய காவல்நிலையத்திற்கு ஓடினார். அவரை காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்றுவந்த அவரை, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் காலையில் நடத்திய அதிரடித் தேடலில், தாக்குதலில் ரவுடி ஆனந்தன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் ஆனந்தன் உள்ளிட்ட 4 முக்கிய குற்றவாளிகள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் அவரை பிடிக்கச் சென்றபோது, மற்ற காவலர்களை ஆனந்தன் கத்தியால் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தங்களை காப்பாற்றிக்கொள்ள காவலர்கள், ரவுடி ஆனந்தனை தற்காப்பிற்காக என்கவுண்டர் செய்துள்ளனர். அடையாறு, மத்திய கைலாஷ் சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.