கம்போடியாவில் இருந்து ரவுடி ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஆவணங்களை உடனே அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஸ்ரீதர். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர் இந்தியாவில் இருந்து தப்பித்து துபாய் சென்று பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பெற்று இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக கம்போடியா சென்ற அவரது மகள் தனலட்சுமி, உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறி திரும்பினார்.
இதனையடுத்து ஸ்ரீதரின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீதரின் உடலை கொண்டு வருவதில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனவாசன், கம்போடியாவில் இருந்து ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவித்தார். மத்திய அரசு தரப்பு விளக்கத்தை கேட்ட நீதிபதி, ஸ்ரீதர் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான ஆவணங்களை உடனே அளிக்குமாறு உத்தரவிட்டடார்.