தமிழ்நாடு

வியாசர்பாடி ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

வியாசர்பாடி ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை

webteam

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி வல்லரசு காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ரவுடி வல்லரசு தனது கூட்டாளிகளுடன் எம்.எம்.கார்டன் பகுதியில் அரிவாளுடன் அட்டகாசம் செய்வதாக காவல்துறைக்கு நேற்று தகவல் கிடைத்தது. தொடர்ந்து, வியாசர்பாடி காவல்நிலைய காவலர் பவுன்ராஜ், ரமேஷ் ஆகியோர் வல்லரசுவை பிடிக்கச் சென்றனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் பவுன்ராஜை, வல்லரசு அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார். படுகாயமடைந்த பவுன்ராஜை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் ரவுடி வல்லரசு பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர்கள் மில்லர், ரவி உள்ளிட்டவர்கள் ரவுடியை பிடிக்கச் செ‌ன்றனர். அப்போது, உதவிக் காவல் ஆய்வாளர்கள் பிரேம்குமார், தீபன் ஆகிய இருவரையும் வல்லரசு அரிவாளால் வெட்டினார். இதையடுத்து ஆய்வாளர்கள், ரவுடியை துப்பாக்கியால் சுட்டனர்.

குண்டு பாய்ந்த வல்லரசுவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது‌, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில், ரவுடியின் கூட்டாளிகளான வியாசர்பாடியைச் சேர்ந்த கதிரவன் மற்றும் பெரம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 

என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி வல்லரசு மீது, கொலை, கொலை முயற்சி, அடிதடி என 10 வழக்குகள் உள்ளதாகவும் இதுதொடர்பாக விசாரணை ‌நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.