கும்பகோணம்  முகநூல்
தமிழ்நாடு

கும்பகோணம் | ஜாமினில் வெளியே வந்த ரவுடி தம்பியை... அண்ணனே அடித்து கொன்ற கொடூரம்! நடந்தது என்ன?

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஜாமினில் வெளியே வந்த ரவுடியை அவரது அண்ணனே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PT WEB

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ் (36). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கும்பகோணம் சரக காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இருந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தன்னுடைய வீட்டின் முன்புறம் செயல்பட்டு வரும் மரக்கடை வாயிலில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

தொடர் விசாரணையில், காளிதாசை கொலை செய்தது அவரது அண்ணன் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து பாண்டியனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், காளிதாஸ் மதுபோதையில் வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்தும், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் குற்றவழக்கு தொடர்பாக சிறைக்கு சென்ற காளிதாஸ் கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்த காளிதாஸ் அண்ணன் பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மர கட்டையால் காளிதாசை தலையில் அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.

இன்று காலை வந்து பார்த்தபோது காளிதாஸ் தலையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். குற்றத்தை பாண்டியன் ஒப்புக்கொண்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.