தமிழ்நாடு

புதுச்சேரி அருகே ரவுடி சரமாரியாக வெட்டி கொலை!

webteam

புதுச்சேரி அருகே ரவுடியை வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்துவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜிம் பாண்டியன் (25). இவர் மீது 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பாண்டியன் அதே பகுதியில்  உள்ள வாலிபால் மைதானத்தில் நேற்று இரவு அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவரை விரட்டியது. சுதாரித்த பாண்டியன் மைதானத்தின் பின்புறம் உள்ள மதில் சுவரை ஏறி குதித்து தப்பி ஓட முயன்றார்.

அவரை விரட்டி வந்த மர்ம கும்பல், இரண்டாக பிரிந்து அவரை மடக்கி நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால் அவரால் தப்பிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த கும்பல் பாண்டியனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது. இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பாண்டியனின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.