தமிழ்நாடு

பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த 6 ரவுடிகள் கைது!

பாஜக கூட்டத்தில் பங்கேற்க வந்த 6 ரவுடிகள் கைது!

JustinDurai

(கோப்பு புகைப்படம்)

வண்டலூர் அருகே பாஜக நலத்திட்ட நிகழ்ச்சியின்போது, கட்சியில் இணைவதற்காக வந்த 6 ரவுடிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே பாஜக சார்பில் மக்களுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல். முருகன், கே.டி.ராகவன், மாவட்ட செயலாளர் பலராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், முக்கிய பொறுப்பாளர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் கட்சி நிர்வாகிகளுடன், கூட்டத்தில் 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சுற்றி திரிவதாகவும், அவர்கள் கைகளில் பட்டா கத்திகள் வைத்திருந்ததாகவும் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனை அறிந்த ஓட்டேரி காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

இதனால் பாஜக கூட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அவர்கள் போலீசாரிடம், “நாங்கள் பாஜக கட்சியில் சேர வந்தோம். நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் போலீசார் இருந்ததால் பயத்தினால் அங்கு செல்லவில்லை” என்று கூறியுள்ளனர்.  மேலும் விசாரணையில் இவர்கள் அனைவரும் பிரபல ரவுடி சூர்யாவின் கூட்டாளிகள் எனவும் தெரியவந்தது.

பாஜகவில் இணைய வந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்ததையொட்டி ஓட்டேரி காவல் நிலையத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.