தமிழ்நாடு

சென்னை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த அண்ணன்- தங்கை உடல்கள்; போலீஸ் விசாரணை

சென்னை: வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த அண்ணன்- தங்கை உடல்கள்; போலீஸ் விசாரணை

PT

கொடுங்கையூரில் அண்ணன்- தங்கையான இருவரின் உடல்கள் அழுகிய நிலையில் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் அடையாள அட்டை இருந்துள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5 வது பிளாக் 115 வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கொடுங்கையூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே 45 வயதிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு நபர்களின் உடல் அழுகிய நிலையில் கிடந்தன.

படுக்கையறையில் மெத்தையில் ஒரு ஆண் சடலமும், மற்றொரு அறையில் பெண் சடலமும் கிடந்தன. இதனையடுத்து இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் வீட்டில் சோதனை செய்து பார்த்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் அடையாள அட்டை இருந்தது. அத்துடன் அதிகப்படியான மாத்திரைகளும் இருந்துள்ளன. அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்ணன்- தங்கையான ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி என்பது தெரிய வந்தது. கடந்த 7 ஆண்டுகளாக இவ் வீட்டில் வசித்து வரும் இருவருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.