தமிழ்நாடு

வீடுகளில் கொள்ளையடித்து துப்பாக்கி வாங்க முயற்சி

webteam

பிரபல ரவுடியை கொலை செய்ய துப்பாக்கி வாங்குவதற்காகவே வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளையன் பிடிபட்டுள்ளான். நூதன முறைகளில் கொள்ளையடித்து சிக்காமல் தப்பி இந்த கொள்ளையன் யார்? அவன் பிடிபட்டது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

30 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மயிலாப்பூர், அபிராமபுரம், மந்தைவெளி பகுதிகளில் 9 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையர்களை பிடிக்க, மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார் முய‌ன்றனர். இதில், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஆனந்தன், மந்தைவெளியைச் சேர்ந்த விஜி ஆகியோரை கைது செய்தனர்.

கைதான ரவுடி ஆனந்தன் மீது 36 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவற்றில் இரண்டு கொலை வழக்குகளும் அடங்கும். இவர் தலைமறைவாக இருக்கும் பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளியாக இருந்து பிறகு எதிரியானவர். இந்த சிடி மணியை கொலை செய்வதற்காக விலை உயர்ந்த துப்பாக்கி ஒன்றை வாங்குவதற்காகவே இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக ரவுடி ஆனந்தன் தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக பட்டினப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆபரணங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

செல்போன் டவர் சிக்னல் வைத்து குற்றவாளிகளை பிடிக்கும் வழக்கம் அதிகரித்து வருவதால், செல்போனை பயன்படுத்தாமல் தப்பி வந்த கொள்ளையர்களை திறம்பட பிடித்த தனிப்படை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.