தோழியின் ஆசையை நிறைவேற்ற யூடியூபர் நிஷாந்த் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் 18 கிலோ நகைகள் கொள்ளையடித்ததாக தெரியவந்துள்ளது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில், நவம்பர் 12-ஆம் தேதி அன்று, சுமார் 15 கிலோ தங்க நகைகளும், 3 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்த நிலையில், இதுகுறித்து கேமரா அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீஸார் யூடியூபர் நிஷாந்த் என்பவர் தான் கொள்ளையடித்தவர் என்பதை கண்டறிந்தனர்.
தொடர்ந்து அவர் யாரிடம் பேசியுள்ளார் என்பதை தகவல் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர், நிஷாந்த்தின் தோழி இன்ஸ்டாகிராம் பிரபலமான மீனாட்சி மற்றும் அவருடைய தந்தை சுரேஷ் இருவரையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாக இருக்கும் நிஷாந்த்தை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில், தோழியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. யூ டியூபர் மற்றும் இன்ஸ்டா பிரபலமான மீனாட்சிக்கும், நிஷாந்த் என்பவருக்கும் நல்ல நட்பு இருந்துள்ளது. இத்தகைய சூழலில் மீனாட்சி புதிய வீடு கட்டிவந்துள்ளார், அதற்காக அதிகளவு பணம் தேவைப்பட்டதாலும், கடன்கள் இருந்ததாலும் நிஷாந்திடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இதையடுத்தே நகைக்கடையில் கொள்ளையடிக்க இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கொள்ளையடிக்க உதவியாக தனது பைக்கையும் நிஷாந்திடம் கொடுத்துள்ளார் மீனாட்சி.
தற்போது கைதாகியுள்ள மீனாட்சியிடமிருந்து போலீசார் நகைகளையும் மீட்டுள்ளனர். நகையை நிஷாந்துக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறுக்கு வழியில் பணம் எடுக்கலாம் என நினைத்த இருவரும் தற்போது வசமாக சிக்கியுள்ளனர்.
இந்த வழக்கில், திருடப்பட்ட நகைகள் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை நன்றாக தெரிந்துவைத்துக்கொண்ட பிறகே திருட்டுச்ச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதனால் சந்தேகம்படும்படி கடைக்கு வந்தவர்கள் யார் என்பதை அடிப்படையாக கொண்டு போலீசார் தேட ஆரம்பித்தனர். ஊழியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அடிக்கடி கடைக்கு வந்து, நகைகளையும், பாதுகாப்பு விவரங்களையும் நோட்டம் விட்டு சென்றதாக தெரிவித்தார்.
அதைவைத்து சிசிடிவி கேமராக்களை சரிபார்த்த போலீஸார், வெவ்வேறு காட்சிகளில் பதிவான நிசாந்தின் டேட்டூவை அடையாளமாக வைத்து அவர் தான் என்பதை உறுதிசெய்துள்ளனர். கடைக்கு வாடிக்கையாளர் போல வந்த நிஷாந்த், கையில் கட்டுடன் இருந்த சிசிடிவி காட்சியையும், பின்னர் தொப்பி அணிந்து வந்த மற்றொரு காட்சியையும், கொள்ளையின்போது முகமூடி அணிந்திருந்த காட்சியையும் போலீசார் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும், 3 காட்சிகளிலும் கையில் இருந்த ஒரே மாதிரியான டாட்டூவை வைத்து, அது நிஷாந்த் தான் என்பதை போலீசார் கண்டுபிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை நகை கொள்ளை வழக்கில் யூடியூபர் மீனாட்சி, கொள்ளையனின் தந்தை சுரேஷ் என கைதான 2 பேரையும் போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தி, நீதிபதியிடம் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.