தமிழ்நாடு

குழந்தையை விற்ற பணத்தை தாயிடமிருந்து திருடிய கொள்ளையர்கள் – சென்னையில் அதிர்ச்சி

குழந்தையை விற்ற பணத்தை தாயிடமிருந்து திருடிய கொள்ளையர்கள் – சென்னையில் அதிர்ச்சி

Veeramani

பெற்ற குழந்தையை விற்று எடுத்துச் சென்ற பணத்தை கொள்ளையர்கள் பறித்துச் சென்றதால், சட்டவிரோதமாக குழந்தையை விற்றது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

சென்னை புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின்(28). இவர் நேற்று தனது மகளுடன் ஆட்டோவில் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத சிலர் முகவரி கேட்பது போல் பணப்பையை பறித்து சென்றனர். இது தொடர்பாக  நேற்றிரவு வேப்பேரி காவல் நிலையத்தில் யாஸ்மின் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரிலேயே  போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே, இதனையடுத்து யாஸ்மினிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்தவரான யாஸ்மினுக்கு கடந்த 11 வருடங்களுக்கு முன்பு மோகன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் யாஸ்மின் இரண்டாவதாக 5 மாத கர்ப்பமாக இருந்தபோது கருத்து வேறுபாடு காரணமாக மோகன் யாஸ்மினை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த யாஸ்மின் குழந்தையை வளர்க்க முடியாமலும், பிறக்க உள்ள குழந்தையை எண்ணியும் வருத்தமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் யாஸ்மினுக்கு மூச்சு கோளாறு பிரச்சனை இருந்து வந்ததால் சிகிச்சைக்காக எல்லீஸ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது எண்ணூர் பகுதியை சேர்ந்த ஜெயகீதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் குழந்தையை கலைக்க ஆலோசனை கேட்டபோது குழந்தையை அதிக விலைக்கு விற்க ஏற்பாடு செய்துதருவதாக கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து கடந்த 21 ஆம் தேதி வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் யாஸ்மினுக்கு குழந்தை பிறந்து 25-ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். இதையடுத்து ஜெயகீதா கைக்குழந்தையுடன் புரசைவாக்கம் பகுதிக்கு வரக் கூறியதால் யாஸ்மின் நேற்று வந்துள்ளார். அப்போது ஜெயகீதாவின் நண்பரான தனம் அழைத்து வந்த இரு நபர்கள் வெற்று முத்திரை தாளில் யாஸ்மினிடம் கையொப்பம் வாங்கிவிட்டு கவரில் பணம் கொடுத்துவிட்டு குழந்தையை பெற்று சென்றனர்.

இதனையடுத்து பணப்பையுடன் யாஸ்மின் தனது மகளுடன் புளியந்தோப்பு ஆடு தொட்டி அருகே ஆட்டோவில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் ஆட்டோ ஓட்டுனருடன் விலாசம் கேட்பதுபோல் யாஸ்மினின் கையிலிருந்த பணப்பையை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த யாஸ்மின் வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் பிறந்த குழந்தையை பெற்றுச் சென்ற நபர்களையும், பணத்தை பறித்து சென்ற நபர்களையும் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் தேடி வருகின்றனர். மேலும் குழந்தையை பெற்று சென்றவர்கள் ஏற்பாடு செய்த நபர்கள் பணத்தை பறித்து சென்றனரா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக குழந்தை விற்கப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை ஆலோசித்து வருகின்றனர்.

குழந்தையை ரூ. 2.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், அதில் வழிப்பறி கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ. 1.80 லட்சம் எனவும் கூறப்படுகிறது. குழந்தையை விற்க புரோக்கராக செயல்பட்ட ஜெயகீதாவை பிடித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜெயகீதா வீட்டில் தங்கியிருந்த சண்முகம் என்பவரையும் பிடித்து காவல்துறை விசாரணை மேற்க