தமிழ்நாடு

பொன்பரப்பியில் வீடுகள் சூறை - நடவடிக்கை கோரி சாலை மறியல்

webteam

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் குடியிருப்பில் புகுந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி ஜெயங்கொண்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளதால் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொன்பரப்பியில் 13 இடங்களில் முகாமிட்டு 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஜெயங்கொண்டம் அண்ணாசிலை முன்பு 300 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டத்தின் மையப்பகுதியில் போராட்டம் நடைபெற்றதால் போக்குவரத்து அரைமணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.