தமிழ்நாடு

சாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் !

சாலை விபத்து மோதல் கொலையில் முடிந்த கொடூரம் !

webteam

சென்னை அம்பத்தூரில் இருசக்கர வாகன விபத்து தொடர்பாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளது.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் பிரிதிவாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பத்தூரை அடுத்த மேனாம்பேட்டைச் சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மணிகண்டன் வாகனம் மீது மோதியதாக தெரிகிறது. இதனையடுத்து விபத்துக்கு காரணம் யார் என மணிகண்டனும் பாலசுந்தரமும் சண்டையிட்டுள்ளனர். அப்போது மணிகண்டனை பாலசுந்தரம் தாக்கியதாக தெரிகிறது. 

ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது சகோதரர் மகேஷ் மற்றும் நண்பர் ராஜேஷுடன் இணைந்து பாலசுந்தரம் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்வினையாற்ற மணிகண்டன் உள்ளிட்ட மூவரையும் தனது நண்பர்களுடன் தேடிச் சென்றுள்ளார் பாலசுந்தரம். மேனாம்பேடு ஆறுமுகநகர் என்னுமிடத்தில் மகேஷ், மணிகண்டன் உள்ளிட்ட மூவரையும் வழிமறித்த பாலசுந்தரம் குழு, அவர்களை உருட்டுக் கட்டையால் அடித்து உதைத்ததாக சொல்லப்படுகிறது. 

காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஷ் உயிரிழந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தாக்குதல் மற்றும் கொலை தொடர்பாக பாலசுந்தரம், அவரது நண்பர்கள் தினேஷ், சதீஷ் மற்றும் சசி ஆகியோரை கைது செய்தனர். ஒரு சாதாரண இரு சக்கர வாகன விபத்து கொலை வரை சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.