தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறவேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.ஆர்.கே நகர் தொகுதியில் 47வது வட்டத்திற்குட்பட்ட கொருக்குப்பேட்டை நாகத்தம்மன் கோயில் தெரு, ரயில்வே கேட், கண்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் வீதிவீதியாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் முறைகேடுகளுக்காக் சிறைக்குச் செல்லப் போகிறார் என பேசினார். சேகர் ரெட்டிக்கும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஓ பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தமிழக அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது மாநிலத்திற்கே பெரிய தலைகுனிவு என கூறினார். தேர்தல் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யவேண்டும் என கூறினார். தேர்தல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.