தமிழ்நாடு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து... இழப்பீடு கேட்கும் திமுக வேட்பாளர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து... இழப்பீடு கேட்கும் திமுக வேட்பாளர்

webteam

பணப்பட்டுவாடா புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக்கூடாது என்று அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மருது கணேஷ் தேர்தலை ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோஷி மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் தங்களது செயல்பாடுகள் மற்றும் தடைகளால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு தேர்தல் ஆணையம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அத்தொகுதி மக்களுக்கு, சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையை ஏற்படுத்தியிருப்பதோடு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவர்களையும் சுதந்திரமாக நடமாட தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக 5 லட்ச ரூபாய் பணத்தையும், உழைப்பையும், நேரத்தையும் தான் செலவிட்டதாகவும், அதற்கு தேர்தல் ஆணையம் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையம் தீவிரமாகச் செயல்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். 

ஆர்.கே. நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்னர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வழக்கில் உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில், தேர்தல் நடைமுறை மீதும், தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்துவிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், இழப்பீடு கேட்டு தேர்தல் ஆணையம் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாகவும் மருதுகணேஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.