தமிழ்நாடு

சிசிடிவி கண்காணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதி

சிசிடிவி கண்காணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதி

Rasus

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் முக்கியத் தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொரு‌த்தப்பட்டு ஆள் மற்றும் வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா தலைமையில் அனைத்துக்கட்சி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் உமேஷ் சின்கா வெளியிட்ட அறிவிப்பில், ஆர்.கே.நகரில்‌ தற்போது இருக்கும் 25, பறக்கும் படைகளின் எண்ணிக்கை, தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள 256 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு, இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பட்டு, அந்தக் காட்சிகள் சேமித்து வைக்கப்படும் ‌என்றும் சின்கா கூறியிருக்கிறார். மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர் என்றும், நாட்டிலேயே முதன்முறையாக அரசியல் கட்சியினரின் செலவினங்களைக் கண்காணிக்க அதிகபட்சமாக 5 வருமானவரித் துறையினர் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்து கொள்ளும் ஒப்புகைச் சீட்டு முறை பற்றி வாக்காளர்கள் அறிய, மாதிரி வாக்குச் சாவடிகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடியு‌ம் வரை இரு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழு இரவுப்பணியில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆர்.கே.நகரில் முக்கியத் தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் சிசிடிவி கேமரா பொரு‌த்தப்பட்டு ஆள் மற்றும் வாகன நடமாட்டம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.