ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளர் மருதுகணேஷ் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அதிமுக-வின் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
டிடிவி தினகரன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அக்காள் மகன். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். 2004ஆம் ஆண்டுடன் எம்பி பதவி முடிவடைந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது. ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் பொருளாளராக பதவி வகித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுள் டிடிவி தினகரனும் ஒருவர். இடைப்பட்ட காலத்தில், தான் சிங்கப்பூரின் குடிமகன் என டிடிவி தினகரன் கூறியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறார்.
தினகரனுக்கு போட்டியாக பிரதான எதிர்க்கட்சியான திமுக யாரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக ஒரு புதுமுக வேட்பாளரை அறிவித்துள்ளது. திமுக வேட்பாளராக போட்டியிடும் மருது கணேஷ் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார்.
மருதுகணேஷ் தியாகராயா கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பும் பின்னர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல் படிப்பும் முடித்துள்ளார். கல்லூரி காலத்திலிருந்து திமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வரும் இவர், ஆர்,கே.நகர் பகுதியில் 2 முறை வட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் மருதுகணேஷ் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாகவே இந்த தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.