தமிழ்நாடு

மக்களிடம் நண்பனாகப் பழகும் ‘ரிவால்டோ’ யானை

மக்களிடம் நண்பனாகப் பழகும் ‘ரிவால்டோ’ யானை

webteam

நீலகிரி மாவட்டத்திற்கு சமீபகாலமாக புதிய அடையாளமாக மாறியுள்ளது அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் ரிவால்டோ என்ற காட்டு யானை. அப்பகுதி மக்களின் நண்பனாக வலம் வரும் ரிவால்டோவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதுமலை வனப்பகுதியில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோவைக்கு எப்படி சின்னதம்பியோ, நீலகிரி மாவட்டத்துக்கு ரிவால்டோ யானை அப்படி இருக்கிறது. மசினகுடியில் மக்களோடு மக்களாக நண்‌பனைப் போல வலம் வருகிறது இந்த யானை. 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த யானை மசினக்குடியில் சுற்றி வருகிறது. எலும்பும் தோலுமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்த யானைக்கு ரிவால்டோ என்ற பெயர் வைத்ததோடு, அதற்கு சிகிச்சை அளித்து உணவு, தண்ணீர் அளித்தார், அப்போது அங்கு வசித்த மார்க் என்ற ஆங்கிலேயர். 

அன்று முதல் அங்கு வரத்தொடங்கிய ரிவால்டோ யானை, மார்க்கின் ஆங்கில மொழி கட்டளைகளுக்கு கட்டுப்படும் அளவிற்கு பழகி போனது. 2013ல் மார்க் காலமானாலும், அவரை தேடி வரும் ரிவால்டோ, தினமும் அவர் வீட்டருகே நின்றுவிட்டுச் செல்லும். அப்படி பழகிய ரிவால்டோவுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் தும்பிக்கையில் காயம் ஏற்பட அதற்கு சிகிச்சை அளித்த பண்டன் என்ற வேட்டைத் தடுப்பு காவலர், அதனுடன் நெருங்கிப் பழகினார். 

அதேநேரம் ரிவால்டோ யானை ஊருக்குள் சுற்றித் திரிவதால் மின்கம்பியில் சிக்கியோ அல்லது கழிவுநீர் தொட்டிகளில் விழுந்தோ உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளதால், அதனை முதுமலைக்கு கொண்டு சென்று இயற்கைச் சூழலில் வாழ வைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.