ரிதன்யா தாயார் கண்ணீர் பேட்டி pt
தமிழ்நாடு

”மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்..” - ரிதன்யாவின் தாயார் கண்ணீர்!

தன் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன் என உயிரிழந்த புதுமணப்பெண் ரிதன்யாவின் தாய் கண்ணீர் மல்க புதிய தலைமுறையிடம் கூறினார்.

Rishan Vengai

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுமணப்பெண் ரிதன்யா தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பிவிட்டு, காரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் ரிதன்யா, அவருக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணனின் பேரனும் ஈஸ்வரமூர்த்தி மகனுமான கவின் குமார் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருப்பூர் ரிதன்யா தற்கொலை

இந்நிலையில், திருமணமாகி 78 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் ரிதன்யா சேவூர் ரோட்டில் தனது காரை நிறுத்தி விட்டு, காரிலேயே தென்னை மரப்பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் குடும்பமே மரணத்திற்கு காரணம்..

தற்கொலைக்கு முன்னதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆடியோ பதிவுகளில் தனது மரணத்துக்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதாக அனுப்பி இருந்தார்.

அந்த ஆடியோ பல்வேறு பகுதிகளில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூன்று பேரும் கைது செய்யப்பட்னர். மாமியார் சித்ரா தேவி மட்டும் பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டார்.

ரிதன்யா தற்கொலை

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ மோகனசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நீதி கிடைக்கும் வரை உண்ண மாட்டேன்..

இந்நிலையில், ரிதன்யாவின் தாய் ஜெயசுதா புதிய தலைமுறைக்கு பேட்டி அளிக்கும் போது கண்ணீர் மல்க பேசினார்.

அப்போது பேசிய அவர், “தன்மகளின் இறப்புக்கு காரணமானவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். மகளுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்துள்ளனர். தனக்கு நடந்தது போல எந்த தாய்க்கும் நடக்கக் கூடாது. விசாரணை என்பது மிக மெதுவாக நடைபெறுகிறது, அதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தோம்.

இறந்து நான்கு நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. தற்போது வரை சிறையில் இருக்கும் கவின் மற்றும் ஈஸ்வரமூர்த்திக்கும் வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்படுகிறது.

தன் மகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை உணவு உண்ண மாட்டேன்" என கண்ணீர் மல்க கூறினார்.