தமிழ்நாடு

"கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் விலக்களியுங்கள்"-மு.க.ஸ்டாலின் கோரிக்கை !

jagadeesh

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் "இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற பருவப் பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்திக் காத்திருக்கும் மாணாக்கர்களுக்குத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது"

"பருவத் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவும், முதலமைச்சரும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் - ஊரடங்கால் பருவத் தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் நலன் குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை"

மேலும் "பருவத் தேர்வுகளுக்கான தேர்வுக்கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் 24-ம் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை - எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்தனர். கொரோனா பேரிடரின் இன்னலுக்கு உள்ளானதால், சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள் கூட பருவத் தேர்வுக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன"

"பேரிடர் நெருக்கடியில் “தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை” முதலமைச்சர் பழனிசாமி கை கழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. ஆகவே, “கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பருவத் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும்” என்று முதலமைச்சர் பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.