தமிழ்நாடு

“தேவிலால் பேசியதை கருணாநிதிக்கு நான் தான் மொழிபெயர்த்தேன்” - முன்னாள் ஐஏஎஸ் தேவசகாயம்

webteam

முன்னாள் துணைப் பிரதமர் தேவிலால் தமிழகம் வந்தபோது அவர் பேசியை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மொழிபெயர்த்தது நான் தான் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1989ஆம் ஆண்டு தேவிலால் தமிழகம் வந்தபோது அவரது இந்தி உரையை கனிமொழி தான் மொழிபெயர்த்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டார். இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, யாருக்கு இந்தி தெரியும் என்பது முக்கியம் அல்ல, அம்மொழி தெரிந்தால் தான் இந்தியர் என கூறுவதா என கேள்வி எழுப்பினார். மேலும், இந்தியை மொழி பெயர்த்தேனா?, ஆதாரம் இருந்தால் நிரூபிக்கட்டும் எனவும் கனிமொழி கூறியிருந்தார்.

இந்நிலையில் தேவிலால் பேச்சை மொழிபெயர்த்தது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் விளக்கமளித்துள்ளார். அதில், தேவிலால் பேச்சை கனிமொழி மொழிபெயர்த்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த சமயம் உண்மையில் துணைப்பிரதமர் தேவிலால் உருது கலந்து பேசிய இந்தியை முதலமைச்சர் கருணாநிதிக்கு தானே மொழிபெயர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானாவில் தான் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிபோது தேவிலால் அம்மாநில முதலமைச்சராக இருந்தவர் என்றும், அந்த வகையில் இருவருக்கும் இடையே இருந்த பழக்கத்தால் தேவிலால் தன்னிடம் மொழிபெயர்க்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.