சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு  ட்விட்டர்
தமிழ்நாடு

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

Jayashree A

சேலத்தில் திமுக-வின் இளைஞரணி மாநாடு இன்று நடந்துவருகிறது. இதில் 25 தீர்மானங்களை முன்மொழிந்தார் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

அதன்படி, “நீட் ஒழிப்பு - தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு - மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கு கண்டனம் - தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டம் - ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்ற வேண்டும் - தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திட வேண்டும் என்ற தீர்மானங்கள், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து - புதுமைப்பெண் திட்டம் - காலை சிற்றுண்டித்திட்டம் - நான் முதல்வன் - கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என முற்போக்குத் திட்டங்களை தந்த திராவிட மாடல் அரசினையும் முதலமைச்சரையும் பாராட்டி போற்றுகிற தீர்மானங்கள், இப்படி 25 தீர்மானங்களையும் மாநாட்டில் நாம் முன்மொழிய அலைகடலென கூடியிருந்த இளைஞரணித் தோழர்கள் பலத்த கரவொலி எழுப்பி அத்தனை தீர்மானங்களையும் நிறைவேற்றித் தந்தனர்” என தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்

இவற்றில் முக்கியமான ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

“தீர்மானம் 20

கலைஞரின் மாநில சுயாட்சியின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும்.

1969 ஆம் ஆண்டு முதன்முதலில் முதலமைச்சரான டாக்டர் கலைஞர் அவர்கள், நீதி அரசர் திரு ராஜமன்னார் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளைப் பெற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1974 இல் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார். அதிகார குவிப்பை தகர்த்து, அதிகார பரவலாக்கத்தை முன்னெடுக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய, மாநில சுயாட்சி தீர்மானத்தின் அடிப்படையில் தற்போதைய தேவைகளை நினைத்து மாநில அரசின் அதிகாரத்தை வலிமைப்படுத்திட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் 21

அமலாக்கத்துறையை கைப்பாவை ஆக்கிய ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை போன்ற அம்புகளை தொடுத்து பாஜக இல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் உள்ள ஆளுங்கட்சியினர் மீதும் பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகள் மீதும் வன்மத்துடன் பாய செய்கின்ற ஒன்றிய பாஜக அரசின் போக்கிற்கு கண்டனங்கள். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவர் பாஜகவிற்கு ஆதரவாக இருந்தால் அவர் மீது எந்த ஒரு வழக்கையும் போடாமல் தூய்மை பட்டம் அளிக்கின்ற பாஜக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கும் இந்த செயல்பாடுகளுக்கும், இந்த மாநாடு வன்மையான கண்டனங்களை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறது.

தீர்மானம் 22

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்.

தீர்மானம் 23

இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம்.

‘ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும், கருப்பு பணம் ஒழிப்பு, ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும்’ என்ற தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியுற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அவற்றை எல்லாம் மறைக்க அயோத்தி ராமர் கோவிலை வைத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஆன்மீகவாதிகளையும் ஏமாற்றுகின்ற ஒரு செயலாகும். இந்து மக்களின் உண்மையான எதிரியான பாஜகவின் மதவாத அரசியலை அம்பலப்படுத்துகின்ற படுத்துகின்ற பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும், என இந்த தீர்மானத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இளைஞர் அணிக்கூட்டம்

தீர்மானம் 24

பாஜக ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்.

பத்தாண்டு காலம் மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இந்தியாவை சீர்கெட செய்வதோடு தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாசிச பாஜக ஆட்சியை அடியோடு வீழ்த்திட மாண்புமிகு முதலமைச்சர் முன்னெடுக்கும் தேர்தல் களங்கள் அனைத்திலும் இளைஞர் அணி தம்பிமார்கள் போர் வீரர்களாக செயல்படுவார்கள், என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றன.

தீர்மானம் 25

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூழல், சமூகநீதி, மதநல்லிணக்கம், சமத்துவம், மாநிலங்களுடைய உரிமைகள், தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதார கட்டமைப்பு, மனித உரிமை இவற்றை கொள்கைகளாக கொண்ட இயக்கங்களை ஒருங்கிணைத்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்குவதில் முன்னணி பங்காற்றிய திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியாக இயங்குகின்றார்.

இளைஞர் அணி 2024 நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கழகத்தினுடைய தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவதற்கு இளைஞர் அணி பொறுப்பேற்கும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம்.

இந்த 25 தீர்மானங்களையும் இளைஞர் அணி தம்பிமார்கள் கைதட்டி வரவேற்று நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்