தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: தனது கடையை தானே அடித்து நொறுக்கிய பழ வியாபாரி- வீடியோ வைரல்

webteam

காரைக்காலில் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரமடைந்த பழக்கடை உரிமையாளர் தனது பழக்கடையை தானே அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக பலர் சாலைகளை ஆக்கிரமித்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் செந்தில்நாதனுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

நகராட்சி ஆணையர் மற்றும் காரைக்கால் வட்டாட்சியர் செல்லமுத்து தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்பொழுது காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலையோர பழக்கடை வைத்திருந்த முருகேசன் என்பவர் கடையை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் மற்றும் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் பேசி தனது பழக்கடையை தானே அடித்து நொறுக்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளில் பேசியதால் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வட்டாட்சியர் அளித்த புகாரின் பெயரில் பழ வியாபாரி முருகேசனை காரைக்கால் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.