தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்த காதலர்கள்; தற்கொலை செய்துகொண்ட காதலியின் தாய்

காதலுக்கு எதிர்ப்பு: விஷம் குடித்த காதலர்கள்; தற்கொலை செய்துகொண்ட காதலியின் தாய்

kaleelrahman

திருணத்தை தடுத்ததால் காதலர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மனமுடைந்த பெண்ணின் தாய் மற்றும் தம்பி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மிண்டிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (50). இவர் டெம்போ ஓட்டுனராக ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அம்சவேணி (42) என்கிற மனைவியும், பிரியா (19), திரிஷா (17), விஷ்ணு (13) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலிருக்கும் பிரியாவிற்கு திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் நிச்சயதார்த்தமும் செய்துள்ளனர். இதையடுத்து வருகிற 21.08.2021 அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, திருமண வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் பிரியாவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (19) என்பவருக்கும் ஏற்கெனவே காதல் இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து (18.07.2021) இரவு இவர்களின் காதல் பிரியாவின் வீட்டிற்கு தெரிய வந்ததை அடுத்து, பிரியாவை அம்வேணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியா, வீட்டில் காதலுக்கு ஏற்பட்ட தடை குறித்து திருப்பதிக்கு போன் மூலம் தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் நேற்று இரவு அவரவர் வீட்டில் பூச்சி மருந்து குடித்துள்ளனர்.

இதில், திருப்பதி மயக்கமடையவே அவரது பெற்றோர் அவரை விசாரித்து மீட்டு தருமபுரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபரம் அறிந்ததும் அம்சவேணி தனது மகள் பிரியாவை வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் பூச்சி மருந்து குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிரியாவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து திருமண தடை, காதல் விவகாரம், பிரியாவின் தற்கொலை முயற்சி ஆகிய சம்பவங்களால் மனமுடைந்த அம்சவேணி நேற்று இரவு தனது இளைய மகள் திரிஷா, மகன் விஷ்ணு ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு வீட்டின் அருகே உள்ள உள்ள விவசாய கிணற்றில் தற்கொலை செய்துகொள்ள குதித்துள்ளனர். குதிக்கும்போது பாறையில் மோதியதில் அம்சவேணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கிணற்றில் விழுந்த விஷ்ணு நீச்சல் தெரியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேளையில் அவரது தாயார் அம்சவேணி அவரை மேலும் தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். இதனால் மூச்சடைத்து விஷ்ணு உயிரிழந்துள்ளார். பின்னர் திரிஷாவை நோக்கி வந்த அம்சவேணி திரிஷாவையும் தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். அந்த போராட்டம் நடைபெறுவதற்குள் அம்சவேணி தலையில் ரத்தம் அதிகம் கசிந்து மயக்கமடைந்து உயிரிழந்தார்.

கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை இறுக்க பிடித்துக்கொண்ட திரிஷா விடியும் வரை காத்திருந்து சப்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் சப்தத்தை கேட்டு அங்கு சென்று பார்க்கவே, இச்சம்பவம் தெரியவந்தது. பின்னர் போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினரின் உதவியோடு திரிஷாவை மீட்டு மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அம்சவேணி மற்றும் விஷ்ணுவை சடலமாக மீட்டு மத்தூர் பிணவரையில் வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)