தமிழ்நாடு

மெட்ரோ பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு

Rasus

மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நில ஆக்கிரமிப்பிற்கு தி.நகர் குடியிருப்புவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விரைவான பயணத்திற்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது அதன் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோடம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் ரோடு மெட்ரோ நிலைய பணிகளுக்கு நில ஆக்கிரமிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தி.நகர் குடியிருப்பு வாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றின் நிலமும் மெட்ரோ பணிகளுக்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கும் குடியிருப்புவாசிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

கங்கை அம்மன் கோயில் தெரு, விவேகானந்தா தெரு, ராமகிருஷ்ணா தெரு உள்பட பல தெரு மக்கள் நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல தலைமுறையாக தாங்கள் அங்கு வசித்து வருவதாகவும், தங்களின் பிள்ளைகள் அருகே உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.