தமிழ்நாடு

அரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்!

அரிசியை விட சிறிய கம்ப்யூட்டர் - பயன்களோ ஏராளம்!

webteam

அரிசியை விட சிறிய அளவிலான உலகத்தின் மிகச் சிறிய கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

தற்போதைய காலகட்டத்தில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்து, நம்மை ஆச்சர்யப்பட வைத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகச் சிறிய கணினியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். அரிசியை விட சிறிய அளவிலான இந்தக் கணினியின், வெறும் 0.3 மில்லி மீட்டர் அளவிலானது. இந்தக் கணினியைக் கொண்டு புற்றுநோயை கண்டறியவும், அதன்மூலம் சிகிச்சை அளிக்கவும் முடியும்.

அத்துடன் எண்ணெய் வித்துக்களின் இருப்பிடங்களை கண்டறியவும், கண்ணில் ஏற்படும் க்ளாகோமா (பசும்படலம்) நோயின் அழுத்தத்தை அறியவும், சிறிய ரக நத்தைகள் தொடர்பாக ஆராயவும், உயிர்வேதியியல் செயல்முறைகளை கண்காணிக்கவும் பயன்படுகிறது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தக் கணினியை கண்டுபிடித்துள்ளதால், இதற்கு மிச்சிகன் மைக்ரோ மோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கணினிக்கு ஐபிஎம் நிறுவனம் ப்ரோக்கிராம்மிங் செய்துள்ளது. ஆனால் இந்தக் கணினியில் மின்சாரம் வழங்குவதில் மட்டும் சில சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக கணினிகளை பயன்படுத்தும் போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதன் தகவல்கள் அதுவாக சேமிக்கப்பட்டு, மீண்டும் மின்சாரம் வந்த பின்னர் செயல்படத்தொடங்கும். ஆனால் இந்தச் சிறிய கணினியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டால், அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றது. இந்தக் கணினி செயல்படுவதற்கு சிறிதளவான மின்சாரமே போதுமானதாகும். இதில் ஒரு சிறிய எல்இடி விளக்கும் பொறுத்தப்பட்டுள்ளது. தகவல்கள் பகிரப்படும் போது அந்த விளக்கு மிளிரும். அதற்கான மின்சாரத்தை கணினி செயல்படும் போது, அதுவே உற்பத்தி செய்துகொள்ளும் தன்மையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தச் சிறியக் கணினியில் உள்ள சிரமங்களும் பிற்காலத்தில் மேம்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.