தங்கம் விலை அதிகரித்து, விற்பனை குறைந்துள்ளதால், தங்கம் வாங்குவதற்கான பான் அட்டையின் வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில மாதங்களாக தங்கம் விலை சுமார் 20 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால், நகைகள் விற்பனை 35 சதவிகிதம் வரை குறைந்திருக்கிறது. எனவே, 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள தங்க நகைகளை வாங்குபவர்கள் பான் எண்ணை கொடுக்க வேண்டும் என்ற பழைய நடைமுறையை மாற்றி 5 லட்சம் ரூபாய் என அதிகரிக்க வேண்டும் என அனைத்து இந்திய நகைகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய விலை உயர்வால் 2 லட்சம் ரூபாய்க்கு மிகக் குறைந்த சவரன் நகைகளே வாங்க முடியும் என்பதால், பான் எண்ணை கொடுப்பதற்கான வரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, நகைகள் விற்பனை 35 சதவிகிதம் வரை சரிந்துள்ளதால், நகை தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் ஏராளமானோர் வேலை இழந்துள்ளதாகவும், விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தங்க நகைகளை வாங்குவதற்கான கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, EMI எனப்படும் மாதத் தவணை முறையில் தங்க நகைகளை வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.