சென்னையிலிருந்து இன்று காலை புனே செல்ல இருந்த ‘நக்கீரன்’ஆசிரியர் கோபாலை, விமான நிலையத்தில் வைத்து சென்னை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். ஆளுநர் மாளிகை துணை செயலாளர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, ஜாம்பஜார் போலீசார் நீதிமன்றத்தில் அளித்த ரிமாண்ட் ரிப்போர்ட்டில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ‘நக்கீரன்’ கோபால் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, ‘நக்கீரன்’ கோபால் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். அதேபோல், நக்கீரன் கோபால் தரப்பில் பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஊடக பிரதிநிதியாக ஆஜராகி தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, “124 சட்டப்பிரிவின் கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்வது இந்தியாவிலேயே முதன்முறை. வழக்கின் கீழ் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்தால் தவறான உதாரணமாகிவிடும்” என்று கூறினார்.
இதனையடுத்து, ‘நக்கீரன்’ கோபால் மீது போடப்பட்ட 124 பிரிவு வழக்கு ரத்து செய்யப்படுவதாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்டிரேட் கோபிநாத் தெரிவித்தார். மேலும், ‘நக்கீரன்’ கோபாலை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப எனவும் கூறினார். இதனால், நீதிமன்றத்தில் இருந்து ‘நக்கீரன்’ கோபால் வெளியே வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.ராம், “ஒரு ஊடக பிரதிநிதியாக என்னுடைய கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தேன். ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் பெரும் ஆபத்து என்றேன். நான் வழக்கறிஞரில்லை ஊடக துறையின் மூத்த பிரதிநிதியாக நீதிமன்றம் சென்றேன். என்னுடைய கருத்தை பதிவு செய்ய அனுமதித்த நீதிபதிக்கு நன்றி” என்று கூறினார்.