தமிழ்நாடு

செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி நிருபர் உட்பட 3 பேர் மீது தாக்குதல் என புகார்

kaleelrahman

செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் உட்பட மூவர் மீது தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆலந்தூர், ஜி.எஸ்.டி. சாலையில் பம்மல் பகுதியைச் சேர்ந்த சுடர் ஒளி( 21), என்பவர் கானா பாடல் பாடிவிட்டு தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பம்மல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மீது மோதி, ஆம்னி பேருந்தின் சக்கரத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தகலவறிந்து செய்தி சேகரிக்க தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி (29), ஒளிப்பதிவாளர் சந்தோஷ், ஓட்டுநர் சக்தி ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது சுடர் ஒளியின் நணபர்கள் அவர்களை தாக்கியதோடு கேமராவையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மூவரும் குரோம்பேட்டை மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விசாரணைக்காக போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளனர்.