தமிழ்நாடு

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது எப்படி? - விசாரணையில் வெளியான தகவல்

கலிலுல்லா

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு மோசமான வானிலையே காரணம் என விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத்தும், அவருடன் சென்றவர்களும் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விபத்து தொடர்பாக முப்படைகளின் கூட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விபத்து நடந்த இடத்தில் முப்படைகள் சார்பில் அமைக்கப்பட்ட மனவேந்திர சிங் குழு விசாரணை நடத்தியது. தற்போது விபத்து தொடர்பான ஆய்வறிக்கையை அக்குழு இறுதி செய்திருப்பதாகவும், அதில் மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மேகக்கூட்டத்துக்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் வழிதவறி விபத்துக்குள்ளானது என்றும், மேகத்துக்குள் நுழைந்ததால் விமானியால் பாதையை கணிக்க முடியாமல் போயிருக்கலாம் என கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. ஹெலிகாப்டர் தரையிறங்க 7 நிமிடம் இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் விசாரணையில் கணிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் இந்த கூட்டு ஆய்வறிக்கை சட்டரீதியாக சரிபார்க்கப்பட்ட பின், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.